
இன்றும் நீயே
சண்டையை
துவக்கி வைத்தாய்
என்னோடு சண்டைபோட
காரணம் எப்பொழுதும்
உனக்கு
இருக்கவே இருக்கிறது
தவறு உன்மேல்
எனிலும்
உன் விழி
என்மேல் பாயும்
பொய் பேசும் உன்னுள்
அந்த அரிவாள் வாக்குவாதம்
விடாப்பிடியாய் நீ பேச
என் நியாயம் நான் பேச
விட்டுக்கொடுத்து பேசி
பழக்கமில்லா உன்னை
புகழ்ந்தா நான் பேச
காரணங்கள் கரைந்து
ஏனோ என்
விழியோரம் நனைக்கும்
என்றோ நடந்த
சம்பவமெல்லாம்
செய்தியாய் வாசிப்பாய்
என்மேல் மட்டும் தான்
தவறென்று கோபத்தோடே
என்னை விட்டு சென்றிடுவாய்
எதுவும் கேக்காமல்
ஊமையாகும்
வாயும் மனமும்
ஒரு நிமிடம் உச்சக்கட்ட வெறுப்பே
வந்துவிடும் எனக்கு
தொலைபேசி அழைப்பு வரும்
இயல்பு திரும்ப
இயல்பாக பேச
முயல்வாய்
நீரற்ற வறண்ட நிலத்தில்
எச்சில் துப்பியது போல்
உணர்வு முடக்கி
நான்
குறைகளுக்கு எதிராய்
நிறைகளை மட்டும்
பேசி
உன் பாசம் சொல்லி
நெகிழ வைப்பாய்
நானும் தேவைப்படுமென
நடித்து வைப்பேன்
பாறையை பூவாக்கும் வித்தை
பிரயோகிப்பாய்
கல்பாறையை கற்கண்டாக்க
முயற்சி செய்வேன்
நான்
அர்த்தமற்ற சண்டையின்
அரிய நோக்கம்
என
குடிகாரனைவிட
அதிகமாய் புலம்புவாய்
முன்னை விட
தித்திக்கும்
அன்று
நம் காதல்
இறுதியில் சொல்வாய்
இதற்குத் தான்
காத்திருந்ததாக
இது தான் ஆண்மை என்று புரிந்து
அமைதியாய் போய்விடுவேன்
No comments:
Post a Comment